வெள்ளி, 3 மார்ச், 2023

நமக்கான அடையாளம் நமது கலாச்சாரத்திற்கான அடையாளம்

 

நாடார் என்பது எங்கள் இன குழுக்களின் அடையாளம்.இந்தியாவிலேயே பணக்கார பெண்ணாக உயர்ந்திருக்கிறீர்கள் ஆனாலும் நீங்கள் உங்களுடைய பெயரில் இருக்கும் ஜாதியை ஏன் விடவில்லை

HCL ரோஷினி நாடார்..:


இதை ஒரு ஜாதியாக நான் கருதவில்லை இதை என்னுடைய அடையாளமாக கருதுகிறேன். என்னுடைய அப்பாவின் உடைய பெயராக கருதுகிறேன், ஆம் என்னுடைய முன்னோர்களின் பெயராக கருதுகிறேன்.


இந்த அடையாளத்தை வைத்து என்னை எளிதாக கண்டுகொள்ள முடியும், நான் எந்த பகுதியை சார்ந்தவள், என்னுடைய உணவு பழக்கம் என்ன, என்னுடைய வழிபாட்டு முறை என்ன, என்னுடைய முன்னோர்களுடைய வாழ்வியல் முறை என்ன, எங்கள் குழுக்கள் உடைய தொழில் என்ன என்று அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம். 


ஆக ஜாதி என்பது ஒருவருடைய அடையாளம். ஆம் எம் முன்னோர்கள் எங்களுக்கு விட்டு சென்ற அடையாளத்தை நான் அழிக்க விரும்பவில்லை..


ஜாதி என்பது ஒரு இனக்குழு, ஒரே மாதிரியான தொழிலை செய்த ஒரு மக்கள் கூட்டம் ஒரு பொதுவான பெயரில் ஒரே கூட்டமாக வாழ்ந்து வந்தார்கள் என்னும் நிலையில் அந்த குழுவினுடைய பெயரை வைத்துக் கொள்வதில் தவறில்லை.


ஆனால் ஒரு ஜாதியை சொல்லி இந்த ஜாதி குறைந்த ஜாதி இந்த ஜாதி உயர்ந்த ஜாதி என்று சொல்லும் ஜாதிய வேறுபாடு நிச்சயமாக கூடாது. எந்த ஜாதியும் தாழ்ந்த ஜாதி அல்ல எந்த ஜாதியும் உயர்ந்த ஜாதி அல்ல எல்லாமே உயர்ந்த ஜாதி தான்...


ஜாதியை வேறுபாடுதான் கூடாது தவிர ஜாதியை அடையாளங்கள் இருப்பதில் தவறில்லை அது நமக்கான அடையாளம் நமது கலாச்சாரத்திற்கான அடையாளம் நமது பண்பாட்டுக்கான அடையாளம் நமது பாரம்பரியத்திற்கான அடையாளம் அதை மறக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.👍🏽



செவ்வாய், 27 ஜூலை, 2021

ஏன் பற்றுதல்களை விட முடியவில்லை?

 

ஏன் பற்றுதல்களை விட முடியவில்லை?



பற்றுவது என்பதன் அர்த்தம்...
தள்ளாடும் போதும், கீழே விழுந்து விடாமல் இருப்பதற்காகவும்...
பற்றுவது தேவைப்படுகிறது!
பற்றியதில் ஒரு பாதுகாப்பு உணர்வு கிடைக்கிறது!
எதையுமே பற்றாமல் இருந்தால்...
அது மலை மேலிருந்து கீழே விழும் உணர்வைத் தந்து பயத்தை உருவாக்குகிறது.
அந்தரத்தைப் பற்றிப் புரிதல் இல்லாததே இந்தப் பயத்திற்குக் காரணம்!
பூமியில் உள்ள கீழே விழும் யதார்த்த உண்மையில் பழக்கப் பட்டு பழக்கப் பட்டு,
உண்மையான "அந்தரமும்" பயம் தருகிறது.
உண்மையில் "பிடிதரமில்லாத அந்தரமே" நித்தியப் பாதுகாப்பனது!
சூரிய, சந்திர, நட்சத்திர, கிரக ங்கள் போன்று மிகப் பெரிய உருவங்கள் அந்தரத்திலே எந்தத் தொல்லையும் இல்லாமல் ஜாலியாக இருப்பதைக் கவனிக்க வேண்டும்!
உண்மையில் நாம் எதார்த்தத்தில் எந்த பற்றுதலும் இல்லாத அந்தரத்தில்தான் இருக்கிறோம்!
அதனால்தான் நமக்கு "அந்தராத்மா" எனப் பெயரும் உண்டு!
ஐயாக்களே, ஆன்மிகத்தில் முன்னேறி வெற்றி பெற...
முதலில், நாம் சார்ந்து பற்றிக் கொண்டிருக்கும் அடையாளங்களாகிய,
மதம், ஜாதி, ஆண், பெண், இன்னார் மகன், இன்னார் கணவர், இன்னார் சீடன், நான் டாக்டர், நான் வக்கீல், நான் இந்தியன் போன்ற நம்மை அடையாளப் படுத்தும் ஒவ்வொரு அடையாளத்திலிருந்தும்...
நாம் பற்றியிருக்கும் கையை மனதளவில் சுத்தமாக எடுத்து விட வேண்டும்.
"நான் அந்தராத்மா"
நான் அந்தராத்மா"
என ஞாபகம் வரும் போதெல்லாம் மனதிற்கு சொல்லிச் சொல்லி புரிய வைத்துக் கொண்டே இருக்க வேண்டும்!
"நாம் எதை அதிகமாக நினைத்த வண்ணம் இருக்கிறோமோ, நாம் அதுவாகவே மாறி விடுவது ஒரு தவிர்க்கவே முடியாத "எதார்த்தச் சட்டம்" ஆகும்!

ஞாயிறு, 11 ஜூலை, 2021

விழிப்புணர்வு

 

விழிப்புணர்வு



எதுவுமே நமது emotionஐ தூண்டிவிட சக்தியற்றதாக ஆக்கப்பட்டுவிடுவதே தவத்தின் நோக்கமாம்...1


அர்த்தம் கற்பிக்கப்பட அவசியமற்றவராக‌

ஆகிக் கொள்வதே தவத்தின் நோக்கமாம்...2


இவ்விரண்டும் உடலின் ஹார்மோன்களை சுரக்க வைத்து நம்மை எதிர்வினை ஆற்ற வைத்துவிடும். பாரட்டவோ, தூற்றவோ, சந்தோஷப்படவோ, கவலைப்படவோ, பொறாமைப்படவோ, அன்பாகவோ, பாசமாகவோ நம்மை ஓரஞ்சார வைத்துவிடும். 


எந்நிலையிலும் ஓரஞ்சார வைக்கப்படா நிலைப்பாட்டை பெற்றவனே யோகியாம்.


ஒரு பாறை அப்படித்தான் இருக்கிறது. ஒரு யோகியும் அப்படித்தான் இருக்கிறான். ஆனால் பாறைக்கும் யோகிக்கும் உணர்வு நிலை விகிதாச்சாரம் 0% to 100%.


போற்றப்படல் ஒன்றின் மீது நிகழ்ந்தால், அதே விஷயம் அதே நேரத்தில் தூற்றப்படலுக்கும் ஆளாகியே தீரும்.


வெறும் போற்றுதலுக்கு மட்டுமே இவர் இதுவரை இலக்காகி வருகிறார் என ஒரு மனிதரையாவது உங்களால் இந்த உலகினில் காட்ட முடியாது.


போற்றலும், தூற்றலும் யோகியிடம் எதிர்பார்க்க முடியாதது. 


ஏனெனில், யோகியர்களின் குறைவுபடாத 100% விழிப்புணர்வால் அவர்களின் ஹார்மோன் சுரப்பிகள் அவைகளாகவே ஹார்மோன்களை சுரக்க இயலாததாக்கப் பட்டுவிடுகிறது.

'இருத்தலின்' நோக்கம்!

 

'இருத்தலின்' நோக்கம்!



மனிதனை படைக்க வேண்டும் என்பதல்ல 'இருத்தலின்' நோக்கம்!
தன்னை மனிதன் வணங்க வேண்டும், ஸ்துதி செய்ய வேண்டும் என்பதற்காக மனிதனானவனை இறைவன் படைத்ததாக பெருவாரியான மனிதர்கள் நினைக்கிறார்கள்!
ஸ்துதியும், நிந்தனையும் மனித அளவிற்கே அர்த்தப் படும் மனிதனின் படைப்புகள்!
இவை இரண்டும் தன்னிடம் நிகழ்த்தப்படும் போது, மனிதனானவன் மகிழ்சியும், கவலையும் அடையலாம்!
தன்னை போற்றிப் புகழ்வதற்காகவே என்று யாராவது எதையாவது படைப்பார்களா?
உதாரணமாக,
நாம் ஒரு பென்டிரைவில் நம்மை நாமே துதிபாடி பதிந்து, அதை தினமும் போட்டுக் கேட்டு ரசிப்போமா?
ஓம் பார்த்திபாய நமக! என சும்மா சும்மா நான் படைத்ததன் மூலமாக நானே கேட்டு மகிழ்வது கேணத் தனமானதாக இருக்காதா?
இப்படிச் செய்வதன் மூலம் இறைவனை குஷிப் படுத்த முடியும் என மனிதன் நினைப்பதுவும் சரியானது அல்ல!
மனிதனின் பகுத்தறிவு எதையும் ஆராயும் தன்மை உடையது.
அந்தத் தன்மையால், தான் யார் என கேள்வி கேட்டு ஆராய்ந்து அதற்கான பதிலையும் கண்டு கொண்டது.
அப்படி சென்ற பாதையில் அது இறைவனைக் கண்டது! பேரானந்தம் கொண்டது!
ஆனால் இப்படி தன்னைப் பார்க்கும் சம்பவங்களை மனிதர்களானவர்கள் சதா நிகழ்த்திக் கொண்டே இருப்பதுவும் இறைவனுக்குத் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை!
உதாரணமாக
பிரபலஸ்தர் ஒருவர், அவரை வாழ்நாளில் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என நாம் நினைப்பது தவறில்லை.
ஆனால், நமது அந்த நினைப்பு அவருக்குத் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை!
ஒருநாள் அவரைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது எதேச்சையாக!
அவரைக் காண வந்தவர்கள் கோடி. நாமும் அதில் ஒருவராய்க் கண்டோம்!
அவருக்குத் தெரியாது நாம் அவரைப் பார்த்தது!
பார்த்த மாத்திரத்தில் நாம் பேரானந்தம் கொள்ளலாம்! தவறேதும் இல்லை!
தேனை, நாவால் நாம் தொடப் போவது தேனுக்குத் தெரியாது! அப்படித் தொட்டவுடன் நாம் அடைந்த இன்பம் பற்றியும் தேனுக்குத் தெரியாது!
இப்படியாகக் கடவுளைக் கண்டதோடு, அதனால் இன்பத்தை அடைந்ததோடு நின்று போக மனிதனானவன் பிறக்க வில்லை!
இந்த அறிவை அடிப்படையாக வைத்து,
Totality யின் நோக்கம் என்ன என கண்டு பிடிப்பதுதான் ஆன்மிக ஞானமாக இருக்கிறது!

சனி, 10 ஜூலை, 2021

ஐந்து அறிவு

 

ஐந்து அறிவு



இந்த உடல் பிறக்கும் போது ஒரு 'நானும்' அதில் கிடையாது!

அப்புறம் ஒவ்வொரு 'நானாக' அதில் உருவாகி சேர்ந்து சேர்ந்து ஆயிரக் கணக்கான 'நான்'களாக அந்த உடலில் குடியிருந்து வருகின்றன.
முதல் நான் பார்க்கும் நான். அப்புறம் கேட்கும் நான் என ஐந்து பிரதான நான்கள் தோன்றி மூளையின் வீடுகளில் குடியிருக்கின்றன.(ஐந்து அறிவு).
அவைகளின் கிளை நான்கள் ஆயிரக் கணக்கில் அந்த உடல் வளர வளர உருவாகிய படி இருக்கும்.
பார்க்கும் வேலையை செய்கிற நானால் கேட்கும் வேலையை செய்ய முடியாது. டிவி பார்க்கும் போது பார்க்கவும் கேட்கவும் தானே செய்கிறோம் என நினைக்கலாம். ஆனால் ஒன்று மாற்றி ஒன்றையே கவனித்து வருவோம். 'ஐயோ சரியா காதில் விழலையே' 'இப்போ இவன் என்ன சொன்னான்' என பக்கத்தில் இருப்பவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வதே இதுக்கு அத்தாட்சி.
தமிழுக்கு பேச ஒரு நான், எழுதத் தெரிந்த ஒரு நான், பாடத் தெரிந்த ஒரு நான் என ஒரு விஷயத்திற்கே பல நான்கள் உண்டு.
இங்கிலீஷ் படிக்காதவனுக்கு அந்த இங்கிலீஸ் நான் உருவாகி இருக்காது.
எனவே ஒரு மனிதன் என்பவன் பல ஆயிரம் நான்களின் மொத்தம் ஆவான். அவன் ஒரு multiple personality! சூழ்நிலைகளுக்கு ஏற்ப அந்த அந்த நான்கள் active mode க்கு வரும்.
இவ்வளவு நான்கள் இருந்தும் பிறகு ஒருவராலும் அதை ஏன் இவ்வளவாகவும் உணர முடியவில்லை? ஒரே நானைத்தானே உணர்கிறோம்!
காரணம்...
நாம் எப்போதும் உணர்ந்து வருவது அந்த ஒரே 'நானாகிய' ஆன்மாவைத்தான்! அதனால் நமக்கு உள்ளே ஒரே நானாகவே நமக்கு வித்தியாசம் இல்லாமல் இருக்கிறது.
ஆனால் பிரச்சனை என்னவெனில்...
இந்த நானை தனியாக rawவாக உணர முடியாது.
மேலே சொன்ன 'அறிவு நான்கள்' active modeக்கு வரும் போது இந்த ஒரிஜினல் 'ஆன்ம நான்' தன்னை இந்த 'அறிவு நானாக' அடையாளப்படுத்தி அறிகிறது.
இப்படியே இந்த ஆன்ம நான் தன்னை பார்பவனாக, கேட்பவனாக, அடிப்பவனாக, அன்பனாக, கோபக்காரனாக, இரங்குபவனாக, ஆங்கிலம் தெரிந்தவனாக, கவிஞனாக, ஞானியாக என மாறி மாறி அடையாளப் படுத்திய வண்ணம் இருக்கும்.
உடல் இறந்த பின் இந்த அறிவு நான்கள் நிரந்தரமாக மறைகின்றன. ஆன்ம நான் இந்த உடலை நம்பியது இல்லையாகையால் அது வழக்கம் போல நிர்குணமாக அறிவற்று எஞ்சி எப்போதும் போல இருக்கிறது. ஆனால் அதை அறிய முடிவதில்லை. அதை அறிவதற்காகத்தான்,
ஆன்மிகத்தில் நாமோ...
இந்த அறிவு multiple personalityகளை சரியாக அடையாளம் படுத்தி இந்த நான்களை எல்லாம் இதுவல்ல ஆன்ம நான், அதுவல்ல ஆன்ம நான் என ஒதுக்கி ஒதுக்கி இறுதியில் இந்த ஒதுக்கவே முடியாத ஆன்மநானை வந்து அடைகிறோம்.
வேதம் இந்த முறையைத் தான் "நேதி நேதி" டெக்னிக் எனக் கூறும்.
இந்த ஆன்மநானை வந்து அடைவதே முக்தி ஆகும்.
இதை அடைய இந்த அறிவுநான்களே ஆரம்பத்தில் உதவுகிறது.
எப்படி உதவுகிறது எனில்...
இந்த அறிவுநான்களை அதே அறிவு நான்களை வைத்தே கழித்துக் கொண்டே வருவோம். முடிவில் ஒரே ஒரு அறிவு நான் மாத்திரம் மிஞ்சும். இந்த ஒன்றே ஒன்றை தூரப் போடுவது மிக எளிதானது என அதை தூர வீசும் போது நமக்கே தெரிய வரும்.
இதை பிணம் சுட பயன்படும் குச்சிக்கு உதாரணம் ஆக்குவார்கள். ஒரு குச்சியை பயன்படுத்தி பிணத்தில் எரியும் தீயை கிளறி விட்டு பிணத்தை சுட்டு முடிக்கும் போது இந்த குச்சியும் கரைந்து கரைந்து சிறியதாகி விடும். பின்பு அதையும் அதே தீயில் போட்டு எரித்து விடுவோம்.
அதே போல்
ஓம் எனும் குச்சியால் இந்த அறிவுநான்களை கிளறிக் கிளறி எரித்து பின்பு இந்த தீய்ந்து போன ஓம் எனும் கடைசி அறிவுநானையும் அதிலேயே கடைசியாக போட்டு எரித்து
நாம் மட்டும் அந்த ஒரிஜினல் 'ஆன்மநானாக' எஞ்சி நிற்போம்!

செவ்வாய், 6 ஜூலை, 2021

பேரானந்தம் என்பது இதுவே!

 

பேரானந்தம் என்பது இதுவே!



நம்ம டிரைவரை மாத்திரம் அவரிடம் காரை கொடுத்து ஒரு பொருளை இன்னொரு ஊரிலுள்ள ஒருவரிடம் கொடுக்க அனுப்பி வைக்கிறீர்கள்.
டிரைவரும் நாம சொன்ன ஊருக்கு நாம சொன்ன வழிப்படி செல்கிறார். இடையிடையே போனில் நாம் அவருக்கு வழி சொல்லிக் கொண்டே இருக்கிறோம். அதன் படியே அவரும் செயல் பட்டு செல்கிறார்.
இந்த நமது உத்தரவுகளை ஏற்கும் ஏற்பியாக அவர் செயல் படுகிறார்....1.
இப்படி சென்று கொண்டிருக்கும் போது இடையே ஒரு தெருவில் கொரோனாவிற்காக தெரு பிளாக் பண்ணப் பட்டிருக்கிறது.
இது சம்பந்தமாக அவர் தெரு மாறி செல்வதற்காக அவரே நம்மிடம் கேட்காமலேயே இயங்குகிறார். அது அவசியமும் கூட. யாரிடமோ கேட்டு வழி ஏற்படுத்திக் கொண்டு சென்று அடைகிறார். இது அவர் தானாகவும் சில சந்தர்ப்பங்களில் செயல் பட முடிகிறது என்பதாகும்...2.
இந்த வாழ்கையில் நமது மூளையும் இப்படி இரு வகையில் செயலாற்றுகிறது.
பிரபஞ்ச உத்தரவுகளான உடலுறவு இச்சை எனும் உத்தரவு, பசி எனும் உத்தரவு போன்றவைகள் வெளியிலிருந்து வரும் உத்தரவுகள் படியே மூளை செயலாற்றுகிறது.
இது போக இந்த இரண்டிற்கும் எவ்வளவு செயல் பட வேண்டும் என மூளையே முடிவு எடுக்கிறது. எத்தனை பெண்கள் வேண்டும்? எவ்வளவு நாளைக்கு உணவு உறுதி படுத்த வேண்டும் என்பதை அதுவே தீர்மானிக்கிறது.
இந்த இரண்டு வகை மூளை இயக்கத்தில் மூளையால் இந்த இரண்டாவது விசயத்தில்
கூட- குறைய என முடிவு எடுக்க முடிகிறது.
இனி...
யோகிமார்கள் இந்த இரண்டாவதற்கான சிந்தனைகளை தனக்குள் வர விடாது செய்து நிம்மதியாக இருக்க முடிகிறது.
அதே வேளையில் வெளியே இருந்து வரும் எண்ண ஓட்டங்களை அவர் தடுப்பதில்லை. அவைகளை நிபந்தனை இன்றி ஓட விட்டு வெளியேற அனுமதிக்கிறார். அவைகளை தடுத்தால் அவருடைய யோக சம நிலை பாதிக்கப்படுவதை அவர் உணர்கிறார். Just அவைகள் வருவது போவதை உணர்கிறார். இப்படி உணர்வது ஒரு கர்மம் அல்ல. தெருவில் ஓடும் நாயை நாம் கண்டும் காணாதது மாதிரிதான்.
ஏகாந்தத்தை இப்படியாக அவர் எதிர் கொண்டு தன்னை சமநிலையிலேயே இருக்குமாறு பார்த்துக் கொண்டு இருக்கிறார். இதில் அவருக்குக் கிடைப்பது சலிப்பில்லாத ஆனந்தம்.
பேரானந்தம் என்பது இதுவே!

நமக்கான அடையாளம் நமது கலாச்சாரத்திற்கான அடையாளம்

  நாடார் என்பது எங்கள் இன குழுக்களின் அடையாளம்.இந்தியாவிலேயே பணக்கார பெண்ணாக உயர்ந்திருக்கிறீர்கள் ஆனாலும் நீங்கள் உங்களுடைய பெயரில் இருக்கு...